Saturday, April 2, 2011

ஜமீலின் உடையக் காத்திருத்தல்

வெளியீட்டு நிகழ்வில் எனது முதலுரை - டீன்கபூர்

எனது தொடக்கவுரையின் கவிதைத் தோரணம்

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஜமீலின் இரண்டாவது கவிதைப் புத்தகத்தை வெளியிடுகின்றது. முன்னர் ஒரு குழந்தை ஜமீலுக்குப் பிறந்து மரியாதையாக வளர்ந்து வாழ்த்துக்களையும் பரிசில்களையும் பெற்றிருக்கின்றது. வெடிக்கக் காத்திருக்கும் இதன் நிலைப்பாடும் சாதகமாக அமையவேண்டும்.

புதுப்புனைவு இலக்கிவட்டம்; என்ன செய்கிறது. ஆம் இலக்கியத்துக்குப் பணி செய்கிறது. மருதமுனையின் நாமத்தை தற்கால இலக்கியவாயிலாக நிலைப்படுத்துகிறது. முன்னெரெல்லாம் பல்வேறு வகையான இலக்கிய அமைப்புக்கள் தோன்றி அதன் பணிகளைச்; செய்துவிட்டு போய்விட்டன. இப்போது கொஞ்ச நண்பர்கள் சேர்ந்து முடியமானதைச் செய்துவருகிறார்கள். கொத்தனை நினைவூட்டினார்கள், பல கவிதை நூல்களை வெளிட்டார்கள், வெளியிடவுள்ளார்கள், கருத்தாடல்கள், நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகிறார்கள், கவியரங்கு செய்கிறார்கள், நிலாவில் இலக்கியம் பேசி உண்டு மகிழ்கிறார்கள், இப்படிப்போகிறது.

ஜமீல் யார்? றகுமான் ஏ.ஜபாரின் தம்பி. புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் செயற்பாட்டாளர்களின் ஒருவாராக இருந்து இலக்கியபணி செய்துவருகிறார். நண்பர்களின் நிகழ்வுகளில் சொந்தமாய் நின்று உதவுபவர். இலக்கியம் பேசுவோர் உண்மையாய்ப் பேசுவதை விரும்புபவர். மனசுக்குள் செருப்பை மூட்டி கண்களால் கக்குவதை விரும்பாதவர். மூத்த இலக்கியக்காரர்களிடம் நெருங்குவதற்கு மிகவும் அஞ்சுபவர். கதிரையால் எறிவார்களோ? நாயை உசிக்காட்டுவார்களோ? கொண்டு செல்லும் அழைப்புக்களை பின்புறமாய் எறிவார்களோ? உன்னைக்குத்தி உன் எழுத்துக்களால் மலைகோர்ப்பேன் எனும் வெறியர்களிடம் நெருக்கமாகிடப்; பயப்பட்டு தலையைக் பிய்ப்பவர். ஆயினும் இன்றைய தனது விழாவிற்கு மனிதர்களை அழைத்திருக்கின்றார். வடித்துத் துடைத்துடைத்திருக்கின்றார். வடிகட்டி தேங்காய்ப்பால் பிளிந்திருக்கின்றார். உண்மையாளர்களை, நேர்மையாளர்களை, பாகுபாடு செய்யாதவர்களை அழைத்திருக்கின்றார். அவர்தான் ஜமீல். ஜமீலுக்குத் தெரியும் காட்டுவெள்ள மனிதர்களையும், கவிஞர்களையும். நானும் அவரும் அனுபவித்தும் இருக்கின்றோம். பயங்கரவாதிகளுக்கு பயந்தமாதிரி. சில இலக்கிய வாதிகளின் தலையில் கர்வம் குடிகொண்டிருக்கும் அப்படி ஜமீல் இருக்கமாட்டார். விருந்தோம்புவார். மரியாதையாக வழி அனுப்பி வைப்பார்.

ஜமீலின் உடையக் காத்திருத்தல் கவிதைகள் பற்றி பலர் இங்கு பேசக் காத்திருக்கின்றார்கள். ஆயினும் என்னுள் ஊடுருவிக்கிடந்த இணையத்தின் கவிதை விமர்சனப் பக்கங்களின் அம்சங்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகிறேன். கவிதையின் ஆணிவேரை இணையம் தெளிவாகப் பேசுவதாக அறிகின்றேன். பத்திரிகைகள், சஞ்சிகைகள் சரியான கவிதை மொழியைச் சொல்லத் தவறி நிற்கின்றன. சில கவிஞர்களுக்கும் கவிதையின் அம்சங்கள் தெரியாது. அந்தவகையில் சில விடயங்கள்.

கவிதையை கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதைக்கு என்று பல அம்சங்கள் உண்டு. அவற்றின் கூட்டுறவுமட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. விளங்கும் கவிதை அல்லது விளங்கா கவிதை என்றாலும் கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனின் உள் மனத்தின் உணர்ச்சி வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

உணர்வதும், கருதுவதும் அனைவருக்கும் உரியவை. அவற்றை அனுபவமாக்கி அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்துவது கவிஞனால் மட்டுமே முடியும். இலக்கியத்தில் என்ன என்பதைவிட எப்படி என்பதே படைப்பாளியை மதிப்பிடும் அளவுகோல் ஆகும். கவிஞனின் வெளிப்பாட்டு முறைகள் எவ்வாறு தொழிற்பட்டுகின்றன. இயற்கையை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதையும் உணர்ச்சிகளை எவ்வண்ணம் வெளிப்படுத்துகின்றார் என்பதையம் படிக்கின்றவரை எவ்வாறு பார்க்கின்றவனாக மாற்றிக் காட்சிகளை உருவாக்கின்றார் என்பதையும் காணலாம்.

கவிதையை மனித மனத்தின் சுனையாகக்கொள்ளலாம். ஊற்று பீறிட்டுக் கிளம்புவதில் கவிதை எழுதுபவனுக்குப் பங்கில்லை. ஊற்றின் விசையைப் பொறுத்துப் பள்ளம் நோக்கிப் பாய்கின்றபோது அது நதியென்று ஆகிறது. நதியின் பாதையைக்கூடக் கவிஞன் தீர்மானித்துவிட முடிவதில்லை. நதியின் பாதையை நதியே தீர்மானிக்கின்றது. சமுதாய அசுத்தங்கள் கலந்து மாசுபடாமல் நதியைப் பாதுகாப்பதே நதிக்கும் நாகரிகத்துக்கும் ஒரு கவிஞன் செய்துவிடக்கூடிய மிகப்பெரிய பணி. நதியுடனான ஊடாட்டத்தின் மூலம் அவனுடைய சுய அசுத்தங்கள் அவ்வப்போது கழுவப்படுவதே கவிதையால் கவிஞனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பயன்.

ஒருவர் அதிகபட்சம் தனது எந்தெந்த அசுத்தங்கள் நதியால் எந்தெந்த சமயத்தில் கழுவப்பட்டன என்று எழுதலாம். ஒரு தேர்ந்த கவிஞனால் நதியை மடைமாற்றிவிட இயலலாம். எப்படியானாலும் இங்கே நதிதான் முன்னிலைப்பட வேண்டும். வேறுமாதிரியாக இருக்கும்போது வாசகருக்குக்; கவிஞன் கிடைப்பார். கவிதை கிடைப்பதில்லை. வாழ்வின் ஊற்று, இருத்தலின் ஊற்று. ஒரு தனிமனத்தின் வழியாகக் கவிதையென வெளிப்படுகிறது எனலாம். ஒரு மோசமான கவிதையில் கூட வாழ்வின் கீற்றை, உயிர்ப்பின் ஒளியைப் பார்த்தவிட இயல்வதால் வாழ்வின் சாரமே கவிதையென வெளிப்படுகிறது என்றுகூடச் சொல்லிவிடலாம். நன்றி காலச் சுவடுக்கு

கவிதை என்றால் என்ன? எது நல்ல கவிதை என்கின்ற வகையிலான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. சிலர் இதுதான் கவிதை எனச் சொல்லத் துணிந்ததைக் காலம் கவ்விச் சென்றுவிட்டது. இதுதான் கவிதை இது கவிதை இல்லை என்று யாராலும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. கவிதை மனசுக்குள் உயிர்ப்பித்த குழந்தைகள் ஒவ்வொரு குழந்தையும் வௌ;வேறு வகையான மனத்துடன் கொள்கையுடன் பிறக்கின்றன.;.

பொதுவாக கவிதை என்பதற்கான சில அடிப்படைக் கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இவ்வகைக் கூறுகள் சிலவற்றை சுந்தரராமசாமியம் சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கவிதையில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். சில வரிகள்.


கவிதை என்பது சுதந்திரம்
கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம்

எனும் வரிகளைக் கவிதை தோன்றவதற்கான சாதக நிலையாகவும், கவிதை எழுதுதல் எனும் முறைப்பாட்டைச் சொல்வதாகவும் அமைகிறது.

கவிதை என்பது பூஜ்ஜியம்
உளறல்களின் பேரர்த்தம்
கவிதை என்பது ஊருடுவி உருக்குலைப்புது

என்னும் மூன்றுவரிகளையும் கவிதையின் தன்மையாகவும்

கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள்
கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம்

எனும் இரண்டு வரிகளையும் கவிதையின் செயலாக்கத்தைச் சொல்லும் வரிகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, மேற்கூறிய வரிகளுக்கு ஒப்பாக ஜெமீலின் கவிதைகள் எவ்வாறான மொழிக்குள் தாழ்ந்துபோய் அல்லது மிதந்துபோய்க் கிடக்கின்றன என்பதை இன்றைய கருத்தாடல்கள் மூலம் அறிய இருக்கின்றோம்.;.
நன்றி.

நூலாசிரியர்

27.03.2011
மருதமுனை நூலக கேட்போர் கூடம்
தலைமை
சத்தார் எம். பிர்தௌஸ்
புதப்புனைவு இலக்கிய வட்ட வெளியீடு

No comments:

Post a Comment